get paid to paste

'சென்னை - 28' அணியின் செகண்ட் இன்னிங்ஸ்!
அதே ஜாலி, கேலி இதிலும். கூடவே செம காமெடி த்ரில்லர். கடத்தல் கும்பலிடம் சிக்கிக்கொண்ட ஒரு பெண், தற்செயலாக அந்தப் பக்கம் வந்த நான்கு அப்பாவிப் பையன்கள். ஆரம்பமாகுது 'சரோஜா!'
'ஒரிஸ்ஸா'விலிருந்து கிளம்பும் கெமிக்கல் டேங்கர் லாரி... கிரிக்கெட் மேட்ச் பார்க்கக் கிளம்பும் சென்னை இளைஞர்கள்... ஹைதராபாத் கடத்தல் கும்பலிடமிருந்து மகளைக் காப்பாற்றத் தவிக்கும் தொழிலதிபர்... இந்த மூன்று ஜியாக்ரஃபிக்கல் லொகேஷன்களுக்கு இடையே நிகழும் ஆக்ஷன் இரவுதான் படம்.

திக் திக் த்ரில்லர் தியரியை வைத்துக்கொண்டு ஸீனுக்கு ஸீன் ஹ்யூமர் பாம் வெடித்திருக்கிறார் இயக்குநர் வெங்கட் பிரபு. எஸ்.பி.பி.சரண், பிரேம்ஜி அமரன், சிவா, வைபவ் என நான்கு நண்பர்களின் திகில் எபிசோடைச் சொன்னவிதம் புதுசு. வழக்கமான சீரியஸ் த்ரில்லர்களில் இருந்து சரோஜாவை வித்தியாசப்படுத்துவது அதன் காமெடி ட்ரீட்மென்ட். எதிர்பார்க்கவே முடியாத இடங்களில் கிச்சுக்கிச்சு மூட்டுகிறது திரைக்கதை.
'ஆஜ் மேரே ஸோனியே' பாடலில் சின்னத்திரை அழுகாச்சி ஆட்களை கலர்ஃபுல்லாக ஆடவிட்டிருப்பது ஓம் சினிமா ஓம்!
நான்கு பேரில் நாக் அவுட் காமெடியனாகப் பிரமாதப்படுத்துகிறார் பிரேம்ஜி. எதிர்ப்படும் ஒவ்வொரு பெண்ணையும் பிரேம்ஜி கண்கள் மின்னப் பார்க்கும்போது, வெள்ளுடை தேவதைகள் 'லலல்லல்லா' பாடுவது லொள்ளு ஜொள்ளு!
சீரியல் நாயகனாக வரும் சிவா, செம ஸ்கோர். 'என்னை நம்பி நிறைய கமிட்மென்ட்ஸ் இருக்கு சார். எல்லா சீரியல்லயும் என் போட்டோ போட்டு மாலை போட்டா, நல்லாவா இருக்கும்?' என்று போங்கு பண்ணுவதும், உயிருக்குப் பயந்து ஓடுகிற இடத்தில், 'வண்டி ரொம்ப டேமேஜ் ஆகிருச்சு. நிறையச் செலவாகும். நீங்க ரெண்டு பேரும் ஷேர் பண்றீங்களா சார்?' என்பதுமாக, பின்றீங்க பிரதர்!
கொல்ட்டி சகோதரர்களும் ரொம்பவே பாந்தம். மனைவியையும் நண்பர்களையும் பேலன்ஸ் பண்ண முடியாமல் தவிக்கும் இடங்களில் எஸ்.பி.பி.சரண் ஜொலிக்கிறார். அந்த பர்ஸ் காமெடி, அவர்களை மீண்டும் டிராஜெடிக்குள் தள்ளுகிற ஸீன்... தியேட்டரில் எழுந்து நின்று சிரிக்கிறார்கள்!
மகளைப் பறிகொடுத்துத் தவிக்கும் பிரகாஷ்ராஜ், 'அண்டர்ப்ளே' ஆக்டிங்கில் கச்சிதம். க்ளைமாக்ஸில் திரி கிள்ளும் இடங்களில் ஓவர் ஆக்ட்டிங்கைத் தவிர்த்திருக்கலாம் ஜெயராம். 'சரோஜா'வான வேகாவுக்கு நடிக்கவோ, துடிக்கவோ வாய்ப்புக்களே இல்லை. வில்ல னின் காதலி நிகிதாவின் ஒரு பாடல்... செம சூடு.
அதிரடி பிஜிஎம் பில்டப்களுடன் வீறுகொண்டு எழும் நண்பர்கள் படை, அடுத்த ஷாட்டிலேயே வில்லன்கள் முன் குத்தவைத்து உட்கார்ந்து குமுறுவது உட்டாலக்கடி காமெடி. 'மெகா சீரியல்' சிவா தலையில் காலி பாட்டிலால் தட்டிக்கொண்டே, 'உன்னை எங்கியோ பார்த்திருக்கேன்டா!' என்று அடியாள் யோசிப்பது, லந்து லாங்வேஜ்!
யுவனின் இசையும் சக்தி சரவணனின் ஒளிப்பதிவும் படத்துக்கு மகா ப்ளஸ். ஒவ்வொரு பாடலிலும் வித்தியாசமாகத் துள்ளும் யுவனின் இசை, பின்னணியிலும் மிரட்டல். 90 சதவிகி தம் டல் லைட்டிங்கில்கதை நகர்ந்தாலும் ஒளிப்பதிவில் டாலடிக்கிறார் சக்தி சரவணன். பிரவீன் - ஸ்ரீகாந்த்தின் எடிட்டிங் கூட்டு அமைத்து வேட்டு வெடிக்கிறது. நிழல், நிஜத்துக்கு வித்தியாசம் கண்டுபிடிக்க முடி யாத விதேஷின் கலை இயக்க மும் அழகு.
பிற்பாதி முழுக்க, சிதிலமான ஃபேக்டரியில் நண்பர்கள் ஓடிக்கொண்டே இருப்பதுதான், அசரவைக்கும் அலுப்பு. எப்படா விடியும், பிரச்னை முடியும் என்று நெளியவைக்கும் ஓட்டம். துப்பாக்கிகளுடன் திரியும் வில்லன் க்ரூப்பை, இந்த பிள்ளைப்பூச்சி நண்பர்கள் 'ஜஸ்ட் லைக் தட்' காலி செய்வது உட்பட, காமெடி லைசென்ஸை வைத்துக்கொண்டு அத்தனை லாஜிக்கையும் அடித்துத் துவம்சம் பண்ணி இருக்கிறார்கள். ஒருகட்டத்தில், எப்படியும் சக்சஸ்ஃபுல்லாகத் தப்பிக்கப் போகிறார்கள் என்பதால், அந்த திகில் த்ரில் சுத்தமாக மிஸ்ஸிங்.
ஒரே இரவில் அடுத்தடுத்து அத்தனை கொலைகள். ஆனால், ஏதோ மிட்நைட் கொசுக்களைக் குட்நைட் அடித்துக் காலி செய்தது போல, விடிந்ததும் செம கூலாக நண்பர்கள் கலைந்து செல்வது... ரொம்ப ஓவருங்க!
இதே மாதிரி படம், இத்தனாம் வருஷம் இங்கிலீஷ்ல வந்திருக்கு என்பது உட்பட விமர்சனங்கள் எழலாம். ஆனால், தமிழில் புதுவகை நகைச்சுவையை இம்மாதிரிப் படங்கள் துவைக்கிவைக்கக்கூடும் என்பதுதான் வெங்கட் பிரபுவின் வெற்றி!
- விகடன் விமர்சனம்


Pasted: Sep 12, 2008, 3:36:05 pm
Views: 86