get paid to paste

அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவால் உலகமே தடுமாறிக் கொண்டிருக்கும் வேளையில், நம்பிக்கை ஊட்டும் விதத்தில் ஒரு தகவல் வந்திருக்கிறது, அதுவும் நம் நாட்டிலிருந்தே என்னும்போது மகிழ்ச்சி அடையாமல் இருக்க முடியாது.

""ஐ.டி.'' என்று சுருக்கமாக அழைக்கப்படும் தகவல் தொழில்நுட்பத் துறையில் இனி முன்போல வேலைவாய்ப்புகள் இருக்காது, இப்போது வாங்குகிற சம்பளமும் குறைந்துவிடும், இனி கம்ப்யூட்டர் தொடர்பான பொறியியல் மற்றும் அறிவியல் படிப்புக்கெல்லாம் பெரிய வரவேற்பு இருக்காது என்று அறம் பாடியவர்கள் எல்லாம் தாங்கள் கூறியதைத் திரும்பப் பெற வேண்டிய நிலைக்கு இத் தகவலால் தள்ளப்பட்டுவிட்டனர்.

அடுத்த 2 ஆண்டுகளில் மட்டும் தகவல் தொழில்நுட்பத் துறையில் நேரடியாக சுமார் 22 லட்சம் பேர்களுக்கும் மறைமுகமாக 80 லட்சம் பேர்களுக்கும் வேலை வாய்ப்பு இருக்கிறது என்று ""நாஸ்காம்'' என்று அழைக்கப்படும் கணினி மென்பொருள், சேவை அளிப்பு நிறுவனங்களின் தேசிய சங்கம் தெரிவித்துள்ளது.

அப்படியானால் ஐ.டி. துறை பாதிக்கப்படவேயில்லையா என்றால் பாதிக்கப்பட்டிருக்கிறது, ஆனால் எல்லோரும் நினைக்கிறபடி ஒரேயடியாக அதல பாதாளத்துக்குப் போய்விடவில்லை.

ஓராண்டுக்கு முன்பிருந்த நிலவரத்தின் அடிப்படையில் அந்தத் துறையின் வளர்ச்சி 21% முதல் 24% வரை இருக்கும் என்று மதிப்பிட்டார்கள். இப்போது அந்த வேகம் சற்றுத் தணிந்திருப்பதால் 16% முதல் 17% வரை வளர்ச்சி இருக்கும் என்று தெரிவிக்கிறார்கள்.

2008-09-ம் ஆண்டில் மென்பொருள் துறை மூலமும், சேவை ஏற்றுமதி மூலமும் சுமார் 2,50,000 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என்று மதிப்பிட்டிருந்தார்கள், அந்தத் தொகை சற்றுக்குறைந்து சுமார் 2,35,000 கோடியாக இருக்கும் என்று இப்போது தெரியவந்துள்ளது.

தகவல் தொழில்நுட்பத்துறையும், அயல்பணி ஒப்படைப்பு (பி.பி.ஓ.) துறையும் இணைந்து ஈட்டும் வருவாய், நமது நாட்டின் ஒட்டுமொத்த பொருள்கள் உற்பத்தி மற்றும் சேவை ஆகியவற்றின் மதிப்பில் (ஜி.டி.பி.) 5.8% ஆக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 2008-09 நிதியாண்டு இறுதியில் இத்துறையின் மொத்த உற்பத்தி மதிப்பு 3,58,000 கோடி ரூபாயாக இருக்கும் என்று இப்போதைய மதிப்பீடு தெரிவிக்கிறது.

வெளி நாடுகளில் மட்டும் அன்றி நம் நாட்டிலும் இப்போது அயல்பணி ஒப்படைப்பு கலாசாரம் பரவி வருகிறது. இது அடுத்த ஆண்டு மேலும் 40% வளர்ச்சி காணும் என்பது "நாஸ்காம்' கணிப்பு.

வெளிநாடுகளுக்கான அயல்பணி ஒப்படைப்புத் துறையில் மட்டும் 17.5% உயர்வு இருக்கும் என்று தெரிகிறது.

சர்வதேசச் சந்தையில் பொருளாதார தேக்க நிலை என்று கூறப்படும் இந்த வேளையில்கூட, ஐரோப்பிய நாடுகளுக்கான அயல்பணி ஒப்படைப்பு ஏற்றுமதியில் நாம் உச்ச கட்டத்தை எட்டியிருக்கிறோம் என்று "நாஸ்காம்' கூறும் தகவல் வியப்பையும் அதே வேளையில் உற்சாகத்தையும் அளிக்கிறது. அமெரிக்கச் சந்தையிலும் நமது ஆதிக்கம் கணிசமாக இருக்கிறது.

2009 வரை சர்வதேசப் பொருளாதாரச் சந்தையில் நிச்சயமற்ற நிலைமையே தொடர்ந்தாலும் 2008-09-க்குப் பிறகு 2010-11 முதல் நமது நாட்டின் ஐ.டி. துறை வளர்ச்சி 15% ஆக இருக்கும் என்று "நாஸ்காம்' தலைவர் சோம் மித்தல் கூறுகிறார்.

2010-11-ல் இத்துறை ஏற்றுமதி மூலம் மட்டுமே 3 லட்சம் கோடி ரூபாய் முதல் 3 லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் வரை நமக்கு வருவாய் கிடைக்கும் என்று அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

பராக் ஒபாமா தலைமையிலான புதிய அரசு அமெரிக்கத் தொழில்துறையை மீட்சிபெற வைக்க பல்வேறு நடவடிக்கைகளை அடுக்கடுக்காக எடுத்துவருகிறது. ""அமெரிக்கர்களாக இருங்கள், அமெரிக்காவில் தயாரித்ததையே வாங்குங்கள்'' என்ற கொள்கையை அமெரிக்க நாடாளுமன்றம் அதிபரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைத்திருக்கிறது. அந்த அளவுக்கு அங்கு தொழில், வர்த்தகத்துறை சுணங்கியிருக்கிறது.

இந் நிலையில் இந்தியாவிலிருந்து செய்யப்படும் ஏற்றுமதிகளைக் கட்டுப்படுத்தவோ, குறைக்கவோ அமெரிக்க அரசு எதையும் செய்யக்கூடாது என்று வலியுறுத்த "நாஸ்காமின்' உயர்நிலைக் குழு விரைவிலேயே அமெரிக்கா செல்லும் என்றும் சோம் மித்தல் தெரிவித்திருக்கிறார்.

ஐ.டி. துறையின் இந்த வளர்ச்சி வெகு விரைவிலேயே பிற துறைகளையும் ஊக்கப்படுத்தி பொருளாதார மீட்சியை விரைவுபடுத்தும் என்று நிச்சயம் நம்புவோமாக.[tpcolor=#0000FF][/tpcolor]

Pasted: Feb 10, 2009, 7:12:48 am
Views: 8